40,000 மாணவர்கள் LKG-யில் சேர்ந்துள்ளனர்: அன்பில் மகேஷ்
தமிழகத்தில் உள்ள 2,381 பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
தஞ்சை டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் தஞ்சை மாவட்டம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருது மற்றும் 100% தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். விழாவில் 1700 ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும், 150 ஆசிரியர்களுக்கு ஒளிரும் ஆசிரியர் விருதும் மற்றும் சிறந்த பள்ளிகளுக்கான விருதும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “அரசு பள்ளியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையில் இன்று சுமார் 1700-க்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மே மாதத்தில் மட்டும் அரசு பள்ளியில் சுமார் 80,000 மேற்பட்ட மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் சுமார் 11 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். உலக தரத்தில் பள்ளிகளுக்கு அரசு கொண்டுவரும் திட்டங்கள் மூலமாக மாணவர்கள் சேர்க்கை என்பது ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள 2,381 பள்ளிகளில் 40 ஆயிரம் மாணவ, மாணவிகள் எல்.கே.ஜி வகுப்பில் சேர்ந்துள்ளனர். இந்தாண்டு மாணவர்களுக்கு பள்ளி திறந்த முதல் நாளே புத்தகங்கள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடும் விதமாக பள்ளிக் கல்வித் துறையில் கலைஞரின் பங்கு எந்த அளவிற்கு உள்ளது என அதன் சிறப்புகளை எடுத்துரைக்கும் விதமாக கொண்டாடுவோம்” என தெரிவித்தார்.