பாஜகவின் சோதனைகளுக்கு திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் – உதயநிதி ஸ்டாலின்
பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாகையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், “திமுகவில் இளைஞரணி, மீனவரணி என சார்பு அணிகள் உள்ளதுபோல பாஜகவின் சார்பு அணிகள்தான் சிபிஐ, அமலாக்கத்துறை. பாஜக எத்தனை சோதனைகளை நடத்தினாலும் திமுகவின் கிளைச்செயலாளர் கூட பயப்படமாட்டான். பெரியார், அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் ஆகியோரின் மறுஉருவமாக செயல்படுவேன்.
பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டத்தை பாஜக அமைச்சர்கள் தமிழ்நாட்டிற்கு வந்து நடத்திக் கொண்டு வருவது சாதனை விளக்க பொதுக் கூட்டம் அல்ல, அது ஒன்பது வருட வேதனை. மோடி சொல்வது எல்லாம் வடை தான். புதிய வேளாண் சட்டம், 100 நாள் வேலை திட்டத்தை முடக்கியது, வேளாண் பொருள்கள் மீது ஜிஎஸ்டி வரி விதித்தது, கருப்பு பணத்தை மீட்போம் என்று கூறி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டு மக்களை அலை கழித்தது, மாணவர்களிடம் நீட் தேர்வை புகுத்தி மாணவர்களின் மருத்துவ கனவுகளை சிதைத்தது, 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவோம், நபர் ஒருவருக்கு ரூ.15 லட்சம் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று கூறி ஏமாற்றியது, இந்தியா முழுவதும் ரயில் விபத்துகளை தொடர்கதையாக வைத்திருப்பது தான் பாஜகவின் சாதனையாக உள்ளன” என்றார்.