ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் அரசுக்கு நெருக்கடி- ஆர்.எஸ்.பாரதி
அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான வீடு, கல்லூரி மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் இன்று காலை 7 மணி முதல் சோதனை நடத்திவருகின்றனர்.
கடந்த 2006 -2011 வரை கனிம வளத்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி செம்மண் எடுத்து அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது வழக்கு தொடரப்பட்டது. அதிமுக ஆட்சியில் 2012 ஆம் ஆண்டு பதிவு செய்த இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கத்துறை சோதனை நடத்திவருகிறது. சோதனை நடைபெறும் பொன்முடி இல்லத்திற்கு சென்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி, “ஆளுநர், அமலாக்கத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது. பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறை தொடர்ந்த எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை. கர்நாடகாவில் பாஜகவுக்கு என்ன ஏற்பட்டதோ, அதுவே காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நடக்கும்.
எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திசை திருப்பவே அமலாக்கத்துறை சோதனை நடத்துகிறது. பாட்னாவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றபோது அமைச்சர் செந்தில்பாலாஜி வீடுகளில் சோதனை நடைபெற்றது. இன்று பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில் அமைச்சர் பொன்முடி வீடுகளில் சோதனை நடைபெறுகிறது. அமைச்சர் பொன்முடி இல்லத்தில் நடைபெறும் அமலாக்கத்துறை சோதனை அகில இந்திய பிரச்சனையாகும்” என்றார்.