அமைச்சரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை- தங்கம் தென்னரசு
செந்தில்பாலாஜி விவகாரத்தில் உரிய விளக்கம் அளித்து ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, “செந்தில்பாலாஜி விவகாரத்தில் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசர கதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி எடுத்துள்ள முடிவை, தமிழ்நாடு அரசு முற்றிலுமாக நிராகரிக்கிறது. அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என முதலமைச்சர் தெளிவுப்படுத்தியுள்ளார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் உரிய விளக்கம் அளித்து ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருக்கிறார்.

சர்க்காரியா கமிஷன், 2ஜி தொடர்பான புகார்களில் திமுக மீது அவதூறு தொடர்ந்து பரப்பப்படுகிறது. குற்றச்சாட்டு உள்ளது என்ற காரணத்தினால் அமைச்சரை பதவி நீக்கம் செய்துவிட முடியாது. ஜெயலலிதா மீது குற்றச்சாட்டு இருந்தபோதும் கூட அவர் தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் நியாயமான விசாரணை நடத்துவதில் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லாத பூனையை இருட்டுக்குள் தேடுவதைப் போல் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். சட்டரீதியாக போராடிதான் திமுக வெற்றிகளை பெற்று வந்துள்ளது. ஆளுநரின் நடவடிக்கையை தமிழக அரசு முற்றிலும் நிராகரிக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.