Homeசெய்திகள்தமிழ்நாடு2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!

-

2026-லும் திமுக தான் ஆட்சிக்கு வரும் என்றும், அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது என்றும் தொண்டர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

கோவையில் நடைபெற்ற ‘ திமுக மாவட்ட நிர்வாகிகளுடன் சந்திப்பு’ நிகழ்ச்சியில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அப்போது, 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி கட்சியினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – கலைஞர் ஆகிய மூவரின் வாழ்க்கையிலும் மிக முக்கியமான ஊர் இந்தக் கோவை என்றும், திமுகவுக்கும் – கோவைக்கும் வரலாற்று ரீதியான பிணைப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். திராவிட இயக்கத்துக்கும் – திமுகவுக்கும் ஏராளமான தளகர்த்தர்களைக் கொடுத்த மண், இந்தக் கோவை மண்! அந்த வழித்தடத்தில், கரூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கோவை மாவட்டத்துக்கு ஒரு சிறந்த செயல்வீரராக அமைச்சர் செந்தில் பாலாஜி கிடைத்திருக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி கொடுத்திருக்கும் உற்சாகத்தோடு, வரும் சட்டமன்றத் தேர்தலில் நாம் முழுமையான வெற்றியைப் பெற வேண்டும்! என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். திமுகவுக்கு உள்ள கட்டமைப்பு தமிழ்நாட்டுக்கு வேறு எந்த கட்சிக்கும் கிடையாது என்றும், நாம் நினைத்தால் எந்தச் செய்தியையும் தமிழ்நாட்டு மக்களிடம் உடனடியாக கொண்டு சேர்க்க முடியும் என்றும் தெரிவித்த அவர், எனவே நமது சாதனைப் பணிகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணிகளைச் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினார். குறிப்பாக இளைஞர்களிடம் கொள்கைகளை விதைப்பதுதான் மிக முக்கியம் என்றும், அவர்கள்தான் எதிர்காலத்துக்கான விதைகள் என்றும் குறிபிட்டார்.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

கோவை மாவட்டத்துக்குட்பட்ட 10 சட்டமன்றத் தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியாக வேண்டும் என்றும், அதற்கான முதல் சந்திப்புதான் இந்தக் கூட்டம்! என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். 2026-லும் நாம்தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். அது சாதாரண வெற்றியாக இருக்கக் கூடாது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். தான் ஒரு இலக்கு கொடுத்திருப்பதாகவும், 200 தொகுதிகளில் வெற்றி என்பதுதான் அந்த இலக்கு என்றும் தெரிவித்த முதலமைச்சர், அதனால் உங்கள் மாவட்டத்தில் இருக்கும் 10 தொகுதிகளுக்கும் நீங்கள்தான் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டார். மேலும், எழுச்சிமிகு தி.மு.க. ஏழாவது முறையும் ஆட்சியைப் பிடிக்க எந்நாளும் உழைப்போம் என்றும் அவர் சூளுரைத்தார்.

 

MUST READ