கோவையில் திமுக முப்பெரும் விழா , வெற்றி விழாவாக கொண்டாட்டம் ஏற்பாடுகள்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறி வாலயத்தில் ஜூன் 8 ஆம் தேதி மாலை நடைபெற்றது. அதில் 5 தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டுள்ளன. அதில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு , புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்ததை பாரட்டும் விதமாக முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவாக கொண்டாட்டம் உட்பட முப்பெரும் விழா நடத்தப்படும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதையொட்டி இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், திமுக சார்பில் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா, 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கு வெற்றி அளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, சிறப்பான வெற்றிக்கு திமுகவை வழிநடத்திச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஜூன் 15 ஆம் தேதி கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நடக்கிறது. இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரைமுருகன் உட்பட அனைத்து அமைச்சர்கள், 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் , திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
இதையடுத்து விழாவிற்கான மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணி கோவை அவினாசி சாலை கொடிசியா மைதானத்தில் தீவிரமாக நடைபெற்றுது. அதேபோல் மேடைக்கு முன்பாக முதல் வரிசையில் அமைச்சர்கள் , அதற்கு பின் வரிசையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உள்ளிட்டோர் அமரும் வகையிலும் தொண்டர்களுக்காக 1 லட்சம் இருக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையும் நூற்றி ஒன்றாவது ஆண்டு துவக்க விழாவையும் நினைவு கூறும் வகையில் மேடையில் சுமார் 8 அடி உயரத்தில் கலைஞர் கருணாநிதியின் இரண்டு திரு உருவ சிலைகளும் மேடையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஏராளமானோர் திரண்டு இந்த விழாவிற்கு வருவார்கள் என்பதற்காக கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக பாதுகாப்பிற்காகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
விழா மேடைக்கு அருகிலேயே காவல்துறையினரின் தற்காலிக கட்டுப்பாட்டு அறை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கொடிசியா வளாகத்தில் திமுக முப்பெரும் விழா நடைபெறுகின்ற நிலையில், அவிநாசி நெடுஞ்சாலை போக்குவரத்து மாற்றம் செய்துள்ளனர்.
புறவழிச்சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் பைபாஸ் வழியாக திருச்சி சாலையில் இணைந்து சிங்காநல்லூர் ராமநாதபுரம் உக்கடம் பகுதிக்கு செல்ல இயலும். அதேபோன்று சக்தி சாலை வழியாகவும் புறவழிச் சாலை வழியாக வரும் வாகனங்கள் பயணிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. அதே போல் அவிநாசி சாலை வழியாக மாநகரை நோக்கி வரும் வாகனங்கள் எஸ். என். ஆர். மற்றும் பயனியர் மில்ஸ் வழியாக சேரன்மாநகர், காளப்பட்டி, தென்னம்பாளையம் வழியாக செல்ல அறிவுறுத்தப்படுகிறது. இரவு 11 மணி வரை கணராக வாகனங்கள் மாநகரத்தில் வர அனுமதி இல்லை.