சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை கிண்டி அரசு பன்னோக்கு மருத்துவமனையில் புற்றுநோய் சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருபவர் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன். இவர் நேற்று மருத்துவமனையில் பணியில் இருந்தபோது, விக்னேஷ் என்கிற இளைஞர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். தற்போது தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், விக்னேஷ் என்கிற அந்த இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. சிகிச்சை பெற்று வரும் மருத்துவரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி மருத்துவர்கள் சங்கம் கண்டம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவத்தைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்திய மருத்துவர் சங்கத்தினர் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் 7,900 மருத்துவமனைகள் மற்றும் 45,000 மருத்துவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இன்று நிறுத்தப்பட்டுள்ளது. அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் செயல்படுகிறது.