விவசாயிகளை ஏமாற்றும் பட்ஜெட்- எடப்பாடி பழனிசாமி
தமிழக விவசாயிகளுக்கு பெரிய திட்டங்கள் எதுவும் வேளாண் பட்ஜெட்டில் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தலைமை செயலக வளாகத்தில் வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைப்பதாக தெரியவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 தராமல் ரூ.100 ஊக்கத்தொகை என ஏமாற்று வேலை செய்கின்றனர். நெல் மூட்டைகளை பாதுகாக்க கவனம் செலுத்தவில்லை. தமிழக அரசு தார்பாய்களை வழங்காததால் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகின்றன.
விவசாயிகளின் பாதிப்பை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. வேளாண் பட்ஜெட் என்பது ஒரு மாய தோற்றம், அதிமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டது. மின் தட்டுப்பாடே இல்லை என்றால் மும்முனை மின்சாரம் வழங்குவதில் நேர கட்டுப்பாடு ஏன்?
காவிரி- குண்டாறு திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியாகாதது கண்டனத்துக்குரியது. வேளாண் மானியக் கோரிக்கையில் உள்ளவற்றை பட்ஜெட்டாக வாசித்துள்ளனர். நீர் நிலைகளை பாதுகாக்க அதிமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை கைவிட்டுள்ளனர். வேளாண் பட்ஜெட் விவசாயிகளை ஏமாற்றும் வகையில் உள்ளது. கரும்புக்கு ஆதார விலை உயர்த்தப்படும் என்ற திமுக வாக்குறுதி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.
கரும்புக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு ஊக்கத்தொகையாக ரூ.195 மட்டுமே அறிவித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர். கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் தரவேண்டிய நிலுவைத் தொகை பற்றி பட்ஜெட்டில் இடம்பெறவில்லை” எனக் குற்றஞ்சாட்டினார்.