செந்தில்பாலாஜி வழக்கு தொடர்பாக கோவையில் 3 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை
கோவையில் டாஸ்மாக் சூப்பரவைசர் முத்துபாலன் இல்லம் மற்றும் கட்டுமான நிறுவனம் உட்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக கோவையில் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் சூப்ரவைசர் முத்துபாலன் என்பவர் வீட்டிக்கு இன்று காலை கேரள பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டின் முன்பாக 10க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே போல் கோவை- திருச்சி சாலையில் உள்ள நாடார் வீதியில் அருண் அசோசியேட் என்ற கட்டுமான நிறுவனத்திலும் கேரளா பதிவு எண் கொண்ட வாகனத்தில் வந்த அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி குடும்பத்தினர் கட்டி வரும் பங்களாவை இந்த அருண்அசோசியேட் நிறுவனமானது கட்டி வருகின்றது. இதன் அடிப்படையில் அருண் அசோசியேட் அலுவலகம் மற்றும் அதன் உரிமையாளர் அருண் இல்லம் ஆகியவற்றில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மொத்தம் மூன்று இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்திவருகின்றனர். கரூர் மற்றும் கோவையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருமானவரித்துறை நடத்திய சோதனையில் கைப்பற்றபட்ட ஆவணங்களின் அடிப்படையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவது குறிப்பிடதக்கது.