கரூரில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை
கரூரில் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக்குமார் வீட்டில் அமலாக்கத்துறையினர் மீண்டும் சோதனை நடத்திவருகின்றனர்.
சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் மூன்றாவது நாளாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் கரூரில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டில் அமலாகத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டுள்ளனர். கட்டுமான பணி நடைபெற்றுவரும் அசோக்குமாரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக அசோக் மனைவி பெயரில் கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் கட்டிவரும் அந்த ஆடம்பர பங்களாவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். செந்தில்பாலாஜி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சோதனை நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அசோக்கிற்கு பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால் அமலாக்கத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.