பாஜக ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் உள்ள அரசுகளை மிரட்டவே அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நபார்டு வங்கி சார்பில் சர்வதேச மகளிர் தின நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின்போது, பல்வேறு மகளிர் குழுக்கள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த பொருட்காட்சி அரங்குகளை தொடங்கி வைத்து, கனிமொழி பார்வையிட்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கனிமொழி எம்.பி., முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, மகளிர் சுய உதவி குழுக்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளன என்று தெரிவித்தார். மகளிர் உரிமைத்தொகை என்பது பெண்களின் உழைப்புக்கான அங்கீகாரம், அந்தப் பணத்தை செலவு செய்ய யாரிடமும் பெண்கள் அனுமதி பெற தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார். பெண்கள் உரிமையையும் அதிகாரத்தையும் பெற வேண்டும் என்பதற்காக தான் புதுமைப்பெண் திட்டம், விடியல் பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை முதலமைச்சர் தினமும் செயல்படுத்தி வருகிறார் என்றும் கனிமொழி பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., தமிழ்நாடு பட்ஜெட் நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்று என்றும், தமிழ் வளர்ச்சிக்காகவும் தமிழின் தொன்மையை காட்டக்கூடிய திட்டங்களோடும், புதிய தொழிற்சாலைகள் மற்றும் கல்வி வளர்ச்சிக்காகவுமான அனைத்து அறிவிப்புகளுக்கும், தன்னுடைய வாழ்த்துகளை தெரிவிப்பதாக கூறினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனின விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த கனிமொழி எம்.பி., தமிழின் மீது மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகள் மீதும், மாநிலங்கள், மக்கள் மீதும் ஒரு மொழியை திணிப்பவர்கள், இந்திய இறையாண்மையை எப்படி காப்பாற்றுவார்கள்? என கேள்வி எழுப்பினார். பாஜக ஆட்சி செய்யாத அத்தனை மாநிலங்களும், அங்கு இருக்கக்கூடிய அரசையும் எதிர்க்க பயன்படுத்தக்கூடிய ஒரு துறையாக அமலாக்கத்துறை உள்ளது என்று கனிமொழி குற்றம்சாட்டினார்.