மணல் குவாரியில் முறைகேடு- அமலாக்கத்துறையினர் சோதனை
திருச்சியில் மணல் குவாரி நடத்திவரும் ராமச்சந்திரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திவருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமசந்திரன். அவருக்கு திருச்சி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட திருவானைக்காவல் அருகே கொள்ளிடம் ஆற்றில் ராமசந்திரனுக்கு சொந்தமான அரசு அனுமதி பெற்ற மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியை திருநெல்வேலியை சேர்ந்த ராஜா என்பவர் மேற்பார்வை செய்து வருகிறார்.
இந்த குவாரியில் அரசு அனுமதித்த டோக்கனை விட அதிக லாரிகள் மணல் அள்ளுவதாக குற்றச்சாட்டு இருந்தது. குறிப்பாக மணல் குவாரியில் மூன்று அடி தான் மணல் அள்ள வேண்டும் என அறிவுறுத்தி இருந்தும் 10 அடிக்கு மேல் மணல் அள்ளுவதாக குற்றச்சாட்டும் உள்ளது. மேலும் நாள் ஒன்றுக்கு 30 முதல் 50 லாரிகள் மட்டுமே மணல் எடுக்க ஆன்லைனில் டோக்கன் விநியோகப்பட்டு மணல் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்கிற விதி இருந்தபோது கையூட்டு பெற்று 500க்கும் மேற்பட்ட லாரிகளை மணல் எடுக்கப்படுகிறது.
இதனால் ஒரு நாளைக்கே பல கோடி ரூபாய் புழங்கப்படுவதாகவும் வந்த புகாரின் அடிப்படையில் இந்த இன்று காலை 10-க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை பதிவெண் கொண்ட ஒரு கார், கேரளா பதிவெண் கொண்ட ஒரு கார் என இரண்டு கார்களில் வந்து கொள்ளிடம் மணல் குவாரி மற்றும் மணல் இருப்பு வைத்திருக்கும் பகுதியில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கொள்ளிடம் கரையின் மறுபுறம் தாளக்குடி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியிலும் மற்றொரு கார் சோதனை செய்து வருகின்றனர்.
அதிகாரிகள் சோதனையின் போது மத்திய துணை ராணுவ படையை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட ராணுவத்தினர் துப்பாக்கி ஏந்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மணல் குவாரியில் சட்டவிரோதமாக எவ்வளவு பணம் இருக்கிறது என்பது குறித்தும் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல மணல் குவாரிக்குள் சென்ற அதிகாரிகள் அங்கிருந்து கட்டுக்கட்டான ஆவணங்களை எடுத்து வந்து அது குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சோதனையின் காரணமாக இன்று காலை முதல் மணல் ரீச்சில் மணல் எடுக்க லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.அதனால் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.