அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ரூ.100 கோடி மதிப்புள்ள நில மோசடி வழக்கில் சிக்கி தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிபிசிஐடி போலீஸாரால் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது.
கரூர் மாவட்டம் வாங்கல் காட்டூரைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவர் நாமக்கலில் சுமதி & கோ என்ற நிறுவனம் மற்றும் பரமத்தி வேலூரில் சுமதி & கோ மற்றும் சுமதி டிரேடர்ஸ் என்ற பெயரில் எலக்ட்ரிக்கல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவருக்கும், கரூர் மாவட்ட அ.தி.மு.க மாவட்ட கழக செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோருக்கும் இடையே நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. மேலும், பல வருடங்களாக பணம் கொடுக்கல் வாங்கலும் இருந்து வந்துள்ளது. எம்.ஆர். விஜயபாஸ்கர் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபொழுது அவரது உத்தரவின் பேரில் அவருடைய பினாமிகள் மூலம் எடுக்கப்பட்ட அரசு காண்ட்ராக்ட்களுக்கு இவரது எலக்ட்ரிக்கல் கடையில் இருந்தே பொருட்கள் சப்ளை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
மேலும், எம்.ஆர். விஜயபாஸ்கரின் குடும்ப உறுப்பினர்களின் பினாமி நிறுவனங்களான Rainbow dyers, Rainbow Bluemetals, Rainbow Infratech, அரியூர் செல்லண்டியம்மன் ட்ரன்ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களுக்கு நேரடியாகவும், வங்கிக்கணக்குகள் மூலமாகவும் பிரகாஷ் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அவரது தம்பி சேகருக்கு நேரடியாக ரூ.10 கோடி வட்டிக்கு கடனாக கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ரூ.10 கோடிக்கான மாத வட்டி ரூ.15,00,000/- த்தை கடந்த 2023-ம் வருடம் ஜீன் மாதத்திலிருந்து தொடர்ச்சியாக ஆறு மாதங்கள் சேகர் தராமல் இருந்துள்ளார். இதனால் 2024-ம் வருடம் ஜனவரி மாதத்தில் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்து கண்டிப்பாக திரும்ப கொடுக்க வேண்டுமென்று கரூரில் அவரது வீட்டிற்கு சென்று பிரகாஷ் கேட்டுள்ளார்.
அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் பிரகாஷை அவதூறாக திட்டி பணம் தரமுடியாது என்று கூறியதோடு, அவதூறான வார்த்தைகளால் திட்டி அனுப்பியதாக கூறப்படுகிறது. பின்னர், ஒரு வாரம் கழித்து பிரகாஷை, கரூர் உத்தமி பொன்னுச்சாமி திருமண மண்டபம் அருகில் உள்ள அவரது வீட்டிற்கு எம்.ஆர்.பாஸ்கர் வரச்சொல்லியிருக்கிறார். அப்போது பிரகாஷின் பெயரில் கரூர் குன்னம்பட்டி மற்றும் தோரணக்கல் பட்டியில் உள்ள சுமார் 100 கோடி ரூபாய் மார்க்கெட் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அவர் சொல்லும் நான்கு நபர்களுக்கு எழுதித்தரும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரகாஷ் மறுப்பு தெரிவித்திருக்கிறார். பின்னர் அடியாட்களை வைத்து மிரட்டி சொத்தை எழுதி வாங்க முன்னாள் அமைச்சர் முயற்சி செய்துள்ளார்.
அவர்களது மிரட்டல் காரணமாகவும், தனது பெயரில் சொத்து இருந்தால் எப்படியும் எழுதி வாங்காமல் விட மாட்டார்கள் என்ற அச்சத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 8ம் தேதி (08-02-24) சொத்தை தனது மகள் பெயரில் தான செட்டில்மெண்ட் செய்துள்ளார். இதன் பின்னர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் மற்றும் பிரவீன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து தான செட்டில் மெண்டாக கொடுத்த சொத்துக்களின் அசல் ஆவணம் எங்கே என கேட்டு பிரகாஷை மிரட்டி அடித்துள்ளனர். இதனால், கோவை கே.எம்.சி.எச் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஏப்ரல் 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
பிரகாஷ் மருத்துவமனையில் இருந்ததை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பிரவீன், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவருடன் இருக்கும் பலரும் சேர்ந்து பிரகாஷின் மகள் சோபனா மற்றும் மனைவி சசிகலா ஆகியோரை மிரட்டி தான செட்டில்மெண்ட்டாக எழுதிக் கொடுத்த சொத்துக்களை அடுத்த நாளே (06-04-2024 ஆம் தேதி) 4 பேர் பெயரில் கிரையம் செய்துள்ளனர். அதாவது “காஞ்சிபும் மாவட்டம் தேவராஜ் மகன் ரகு, ஈரோடு மாவட்டம் முத்துச்சாமி மகன் சித்தார்த்தன், கரூர் மாவட்டம் நாச்சியப்பன் மகன் மாரப்பன் மற்றும் சுரூர் மாவட்டம் செல்லமுத்து மகன் செல்வராஜ் ”ஆகியோர்களின் பெயரில் மோசடியாக சொத்துக்களை பிரித்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.
ஆனால், சோபனாவுக்கு எழுதிக் கொடுக்கப்பட்ட தான செட்டில்மெண்ட்டின் அசல் பத்திரம் பிரகாஷ் வசம் இருக்கும் நிலையில், அந்த ஆவணங்கள் தொலைந்து விட்டதாகவும், அந்த ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லி வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் இருந்து கொடுக்கப்பட்டதாக பொய்யான Not Traceable சான்றிதழை பெற்றுள்ளனர். இதனை கரூர், மேலக்கஞர் சார்பதிவாளர் வசம் கொடுத்து (ஆவண எண்.P/38/2024) Pending பத்திரமாக இருந்ததை கடந்த மே-10 ( 10-05-2024) அன்று Regular பத்திரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருப்பவர் பிருத்திவிராஜ். இவர் கரூர் நகர காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்த போது அப்போதைய அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மிக நெருக்கமான விசுவாசியாக இருந்தார் என கூறப்படுகிறது. இந்த நட்பை பயன்படுத்தி மிக எளிதாக Non trasable certificate பெறப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக இந்த சான்றிதழ் பெற சாமானிய மக்களுக்கு 30 நாட்களுக்கும் மேல் ஆகும் நிலையில், 3 நாட்களில் போலி சான்றிதழை பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நிலம் மோசடியாக கிரையம் செய்யப்பட்டதை அறிந்த பிரகாஷ் மருத்துவமனையில் இருந்து வந்ததும், கடந்த மே 11ம் தேதியன்று கரூர், மேலக்கருர் சார்பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணங்கள் தன்னிடம் உள்ளது என்றும், போலியான Not Traceable சான்றிதழை கொடுத்து பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் தெரிவித்து, அசல் ஆவணங்களை கிரையம் பெற்ற நபர்களிடம் ஒப்படைக்க கூடாது என்று கோரி மனு அளித்துள்ளார். இதையடுத்து மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதர், கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகார் அளித்திருக்கிறார். அதன் அடிப்படையில் ரகு, சித்தார்த், செல்வராஜ் உள்ளிட்ட ஏழு பேர்கள் மீது நில மோசடி, கூட்டு சதி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தானும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்படலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். நேற்றைய தினம் விசாரணைக்கு வந்த இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆகையால் தான் எப்போதும் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கடந்த 12 நாட்களுக்கு மேலாக தலைமறைவாக இருந்து வருகிறார். இதனிடையே முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.