Homeசெய்திகள்தமிழ்நாடுஅரிவாளுடன் தோட்டத்திற்குள் புகுந்த நபர்.. சுட்டுத்தள்ளிய விவசாயி.. யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

அரிவாளுடன் தோட்டத்திற்குள் புகுந்த நபர்.. சுட்டுத்தள்ளிய விவசாயி.. யாரும் எதிர்பார்க்காத ஒரு ட்விஸ்ட்

-

கோபி அருகே உள்ள நாகர்பாளையத்தில் துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழப்பு..
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே தோட்டத்திற்குள் புகுந்த நபரை, விவசாயி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கோபி அருகே உள்ள நாகர்பாளையம் கிராமம் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்தவர் மோகன்லால்(55). இவர் தனக்குச் சொந்தமான விவசாய தோட்டத்திற்கு நடுவே உள்ள வீட்டில் மனைவி ராஜதிலகம், மகன் தியானேஷ்வரன், மோகன்லாலின் தாயார் கோகிலாம்பாள், மோகன்லால் மனைவியின் தாயார்(மாமியார்) சுப்புலட்சுமி ஆகியோருடன் வசித்து வருகிறார். இவர் தனது நிலத்தில் மற்ற பயிர்களுடன் சந்தன மரங்களை பயிரிட்டு வளர்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவரது தோட்டத்தில் இருந்த 2 சந்தன மரங்களை மர்ம நபர்கள் இரவோடு இரவாக வெட்டி எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து மோகன்லால் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு மோகன்லால் கூடுதல் கவனத்துடன் இருந்து வந்துள்ளார். அத்துடன் இரவு நேரங்களில் சத்தம் கேட்டால், பாதுகாப்பிற்காக தான் உரிமம் பெற்று வைத்திருந்த துப்பாக்கியை கையில் வைத்திருப்பதை வழக்கமாகவும் கொண்டிருக்கிறார். அந்தவகையில் நேற்றிரவு வழக்கம்போல் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது, தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 2 நாய்கள் வழக்கத்திற்கு மாறாக குறைத்துக்கொண்டே இருந்துள்ளன. இதனால் சந்தேகமடைந்த மோகன்லால் துப்பாக்கியுடன் வெளியே வந்து பார்த்தபோது, இருட்டிலிருந்து ஒரு நபர் 2 அடி நீளமுள்ள அரிவாளுடன் அவரை வெட்டுவதற்காக வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மோகன்லால் துப்பாக்கியால் அந்த நபரை நோக்கிச் சுட்டுள்ளார்.
துப்பாக்கிச்சூடு - சுட்டுக்கொலை

இதில் மார்பில் குண்டு பாய்ந்த அந்த அபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து மோகன்லால் உடனடியாக போலீஸாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, நாகர்பாளையம் போலீஸார், வட்டாட்சியர் சரவணக்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். நேரில் விசாரணை நடத்தியதில் துப்பாக்கிச் சூட்டின்போது கோபி – நாகர்பாளையம் சாலையில் மேலும் இரண்டு நபர்களின் சத்தம் கேட்டதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். பின்னர் போலீஸார் அப்பகுதி முழுவதும் சோதனை நடத்தியதில், அங்கு இருசக்க வாகனத்துடன் இரண்டு பேர் இருந்துள்ளனர்.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தது மொடச்சூர் செங்கோட்டையன் காலணியை சேர்ந்த கண்ணன் என்பதும், பிடிபட்ட இருவரும் அவருடைய மகன்கள் மூர்த்தி மற்றும் விஜய் என்பதும் தெரியவந்தது. இதில் பி.இ பட்டதாரியான விஜய் ல.கள்ளிப்பட்டியில் உள்ள துணிக்கடையில் வேலைபார்த்து வருகிறார். அவர்கள் இருவரும் தந்தையை தேடி அங்கு வந்ததாக போலீசாரிடம் தெரிவித்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், உயிரிழந்த கண்ணனின் உடலை உடற்கூறு ஆய்விற்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே போலீஸில் பிடிபட்ட விஜய், கோபி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார். அதில், கண்ணன் கடந்த 2 நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் , தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அண்ணன் மூர்த்தியுடன் இருசக்கர வாகனத்தில் தந்தை கண்ணனை கோபியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வண்டியில் பெட்ரொல் தீர்த்துவிட்டதால் அவர்கள் இருவரையும் அங்கேயே இருக்கச் சொல்லிவிட்டு தான் மட்டும் பெட்ரோல் வாங்கச் சென்றுவிட்டதாக கூறியுள்ளார். திரும்பி வந்து பார்த்தபோது இருவரையும் அங்கே காணவில்லை எனவும், செல்போனில் தொடர்பு கொண்டு மூர்த்தியிடம் கேட்ட போது, கண்ணன் இருட்டில் அருகில் உள்ள தோட்டத்திற்குள் ஓடியதாகவும், தேடி பார்த்த போது கிடைக்கவில்லை என்றும் கூறியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர் இருவரும் தோட்டத்திற்குள் சென்று தேடிய போது, தோட்டத்தில் துப்பாக்கியுடன் இருந்த ஒருவர் கண்ணனிடம் திருட வந்தாயா எனக்கேட்டதோடு, ஓடினால் சுட்டு விடுவேன் என கூறிக்கொண்டே, துப்பாக்கியால் சுட்டுவிட்டு அந்த நபர் வீட்டிற்குள் சென்று விட்டதாகவும், அதைத்தொடர்ந்து இருவரும் ஊருக்குள் சென்று உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டு மீண்டும் வந்து பார்த்த போது, நீளமான அரிவாளை கையில் பிடித்தபடி கண்ணன் இறந்து கிடந்ததாகவும் புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், துப்பாக்கியால் சுட்டவர் கீரிப்பள்ளம் தோட்டத்தை சேர்ந்த மோகன்லால் என்பவர் எனத்தெரிய வந்ததாக விஜய் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 2 மாதங்களுக்கு முன்னர் சந்தன மரம் திருட வந்தவர்கள் இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிய நிலையில், அந்த வாகனத்தை மோகன்லாலின் தோட்டத்திலேயே நிறுத்தி வைக்குமாறும், யாராவது வாகனத்தை தேடி வந்தால் தகவல் தெரிவிக்கும்படியும் போலீஸார் கூறியிருக்கின்றனர். அத்துடன் மோகன்லாலின் புகார் மீதும் எந்த மனுவும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. அப்போதே புகார் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது என்றும் மோகன்லால் குடும்பத்தினர் கூறுகின்றனர்.

கண்ணன் குடும்பத்தினர் சந்தன மரம் வெட்டுவதற்காக அந்த நேரத்தில் அங்கு வந்தார்களா? அல்லது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்க வாகனத்தை எடுத்துச் செல்ல வந்தார்களா? 2 மாதங்களுக்கு முன்னர் வந்து சந்தன மரத்தை வெட்டிச்சென்றவர்கள்ன் யார்? அல்லது கண்ணன் உண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததா? மருத்துவமனைக்குச் சென்ற கண்ணனின் கையில் 2 அடி நீள அரிவாள் எப்படி வந்தது? என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு பதில் போலீஸாரின் விசாரணையில் தெரியவரும்.

MUST READ