மின்சாரம் தாக்கி பெண் பயிற்சி மருத்துவர் பலி
அயனாவரத்தில் பெண் பயிற்சி மருத்துவர் லேப்டாப் சார்ஜ் போடும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் சரனிதா (32). இவருக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு உதயகுமார் என்பவருடன் திருமணமாகி 5 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர் உதயகுமார் கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சரனிதா எம்.டி மருத்துவ படிப்பு இறுதி ஆண்டை முடித்துவிட்டு பயிற்சிக்காக சென்னை வந்த நிலையில், அயனாவரத்தில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி, சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில், கணவர் உதயகுமார் போன் செய்ததாகவும், போன் எடுக்காததால் தனியார் விடுதியின் அலுவலகத்திற்கு போன் செய்து சரனிதாவை சென்று பார்க்குமாறு கூறியதாகவும் தெரிகிறது. இதனையடுத்து ஹவுஸ் கீப்பிங் பணியை மேற்கொள்ளும் கமலா என்பவர் சென்று பார்த்தபோது அவர் எந்தவித அசைவும் இன்றி படுத்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த அயனாவரம் போலீசார் சரனிதா உயிரிழந்ததை உறுதி செய்த பிறகு, உடலை அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் போலீஸ் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சரணிதா நேற்று காலை பணி புரிவதற்காக லேப்டாப் எடுத்த போது அதில் சார்ஜ் குறைவாக இருந்ததால், லேப்டாப்பிற்கு சார்ஜ் போட முயன்றுள்ளார்.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கிய நிலையில் அவர் சார்ஜர் வயரை கையில் பிடித்தவாரே தரையில் சரிந்து விழுந்து உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரது கையில் மின்சாரம் தாக்கியதற்கான தழும்புகளும் உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்காக சென்னை வந்த பெண் மருத்துவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..