வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிப்படைந்தது.
தமிழகத்தின் புயல், மழையால் 1.5 கோடி மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என கூறப்படுகிறது. பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து இடைக்கால நிவாரண நிதியாக ரூ.2 ஆயிரம் கோடியை ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடி ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பு குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
அதனை முதல்வர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதில் ”ஃபெஞ்சல் புயல் தமிழ்நாட்டில் ஏற்படுத்தியுள்ள கடுமையான பாதிப்புகள் குறித்து மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு கேட்டறிந்தார்.
மாநில அரசு பேரிடர் பாதிப்பைத் திறம்பட எதிர்கொண்டு வருவதையும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருவதையும் மாண்புமிகு பிரதமரிடம் தெரிவித்து, தமிழ்நாட்டு மக்களைக் கடும் துன்பத்தில் ஆழ்த்தியுள்ள இந்தப் புயலின் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்கி , புயல் சேதங்கள் குறித்த விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ள ஒன்றியக் குழுவை அனுப்பிட வேண்டும் என்ற எனது கடிதத்தைக் குறிப்பிட்டு, இது குறித்து மீண்டும் வலியுறுத்தினேன்.
தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கையை மாண்புமிகு பிரதமர் அவர்கள் உடனடியாகப் பரிசீலித்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வார் என்று உறுதிபட நம்புகிறேன்”என பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்று முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார்.
உயிருக்கு போராடும் இஸ்கான் வழக்கறிஞர்: இஸ்லாமிய மதவாதிகள் கொலைவெறி தாக்குதல்