சுகாதாரத்துறை நடத்திய ஆய்வில் உணவகங்களுக்கு 10 லட்சத்திற்கும் மேல் அபராதம். அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்
தமிழ்நாடு சுகாதார நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு முழுவதும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் எளிதில் கெட்டு போகக்கூடிய உணவு வகைகளான ஷவர்மா, இறைச்சி வகைகள் மற்றும் சட்னி, மோர், தயிர் ஆகிய உணவுகளின் தரம் குறித்து சிறப்பு ஆய்வு மேற்கொள்ள மாவட்ட நியமன அலுவலர்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அந்த வகையில் 15,236 உணவகங்களை ஆய்வு செய்து, 1,572 உணவகங்களில் தரமற்ற உணவு விற்பனை செய்வது கண்டறியப்பட்டு, 5018 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.
மேலும் தரமற்ற உணவகங்களுக்கு ரூ.8,79,800 அபராதம் விதிக்கப்பட்டது.உரிய சுகாதாரமில்லாமலும், தரம் குறைவான உணவு பொருட்களை வைத்திருந்த 23 கடைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர தேங்காய் சட்னி ,தயிர் ஆகிய உணவு பொருட்களின் தரம் குறித்தும் சிறப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 7,760 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில் 238 கடைகளில் தரம் குறைவாக இருந்ததால், 213 கிலோ உணவு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டு ரூ.1,47,000 அபராதம் விதிக்கப்பட்டது. ஆக மொத்தம் தரமற்ற உணவுகள் கண்டறியப்பட்டு இதுவரை ரூ.10,26,800 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுகாதாரமற்ற உணவகங்களை பொதுமக்கள் கண்டறிந்தால் புகார்களை 9444042322 வாட்ஸ்அப் மூலமாகவும் www.foodsafety.tn.gov.in செயலி மூலமாகவும் பதிவு செய்யலாம்.