Homeசெய்திகள்தமிழ்நாடுமுரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

முரசொலி செல்வம் பெயரால் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

-

- Advertisement -

முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மறைந்த மூத்த பத்திரிகையாளரும், கலைஞரின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் படத்திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி நிகழ்ச்சி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கலந்துகொண்டு முரசொலி செல்வத்தின் படத்தை திறந்துவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முரசொலி செல்வம் மறைந்துவிட்டார் என்பதை தங்களால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை; ஏன் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று கூறினார். பேசுவதால் அவர் திரும்பி வந்துவிடப் போகிறாரா? என்ற அந்த ஏக்கமும் தன்னுடைய நெஞ்சத்தை, தன்னுடைய தொண்டையை அடைத்துக் கொண்டிருக்கிறது என்றும் முதலமைச்சர் வேதனையுடன் குறிப்பிட்டார்.

கலைஞரை பொருத்தவரையில் செல்வம் அவர்களுக்கு இரண்டாம் தாயாக, செல்வத்தை வளர்த்தவராக இருந்தார் என குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கலைஞருடைய வார்ப்பாக செல்வம் விளங்கினார் என்றும் தெரிவித்தார். அவர் தங்களுக்கெல்லாம் மூத்த அண்ணனாக இருந்து அறிவுரைகளை, ஆலோசனைகளை அவ்வப்போது வழங்கிக்கொண்டு இருந்தார் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

"மக்களை நோக்கி அரசு அலுவலகங்கள் செல்ல வேண்டும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், முரசொலி செல்வம்  ஆகியோரது மறைவிற்குப் பிறகு தனது மனம் உடைந்து சுக்குநூறு ஆகியிருக்கிறதாகவும், அதிலிருந்து எப்படி மீளப்போகிறோம் என்பதை தாம் எண்ணி எண்ணித் தவித்துக்கொண்டு இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்தபோதும், கோபாலபுரத்தில் இளைஞர் திமுக என்ற அமைப்பை தொடங்கியபோதும் தனக்குத் துணையாக இருந்தவர். எப்படி கூட்டம் நடத்த வேண்டும், எப்படி பேச்சாளரை அழைத்து வர வேண்டும், எப்படி நோட்டீஸ் போட வேண்டும், எப்படி போஸ்டர் அடிக்க வேண்டும் என்பதையெல்லாம் தனக்குக் கற்றுக்கொடுத்தவர். அதற்குப் பிறகு இளைஞர் அணியாக உருவாகியபோது அப்போதும் தனக்குத் துணை நின்று என்னை ஊக்கப்படுத்தியவர், உற்சாகப்படுத்தியவர்.

பிரபல பத்திரிகையாளர் முரசொலி செல்வம் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

ஒரு மாநாடு என்று சொன்னால், கட்சியின் பெரிய கூட்டம் என்று சொன்னால், ஏதேனும் கழக நிகழ்ச்சி என்று சொன்னால், ஏதேனும் நிகழ்ச்சிக்குப் போகிறேன் என்றால் அதைக் கேள்விப்பட்டு முதல்நாளே தம்மை அழைத்து ஒரு சீட்டை கொடுப்பார். என்ன பேசவேண்டும்; எப்படி பேசவேண்டும்; என்ன பாயிண்டில் பேசவேண்டும்; அதை எப்படி ஏற்ற இறக்கத்தோடு பேசவேண்டும் என்று தனக்குப் பயிற்சி அளித்தவர் முரசொலி செல்வம் என்றும், அப்படிப்பட்டவர் இன்றைக்கு இல்லை என்று எண்ணும்போது தான் வேதனைப்படுகிறேன் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

திமுக முக்கியமான நிகழ்ச்சிகள் மட்டும் அல்ல, தேர்தல் களத்தில் பிரசாரக் கூட்டங்கள் அல்லது அரசு நிகழ்ச்சிகள் என தான் கலந்துகொள்ளும் அத்தனை நிகழ்ச்சிகளையும் முழுமையாக பார்த்துவிட்டு, “இப்படி எல்லாம் பேசினாய், மிகவும் சிறப்பாக இருந்தது; எழுச்சியாக இருந்தது. இன்னும் இவ்வாறு மாற்றிப் பேசி இருக்கலாம்; இன்னும் கொஞ்சம் விரிவாகப் பேசியிருக்கலாம்” என்றெல்லாம் அறிவுரை சொல்வார் என்று குறிப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காலை, மாலை என்று இரண்டு முறையாவது தமக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசுகின்ற வழக்கத்தை தாங்கள் பெற்றிருந்தோம் என்றும் கூறினார்.

மறைந்த முரசொலி செல்வம் பெயரால் மிக விரைவில் அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டு, திராவிட இயக்கத்தைச் சார்ந்த படைப்புகளுக்கும், படைப்பாளிகளுக்கும் ஆண்டுதோறும் திமுக முப்பெரும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

MUST READ