”G Square திமுகவினருக்கு சொந்தமானது அல்ல”
ஜி ஸ்கொயர் நிறுவனம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறது. இந்த நிலையில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுகவின் குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான என பாஜக குற்றம்சாட்டியது.
இதையடுத்து ஜி ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையின் ஆழ்வார்பேட்டை, அண்ணாநகர், போரூர் உள்ளிட்ட பல இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களிலும் ஜி ஸ்கொயர் நிறுவன அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவருகிறது. பெங்களூரு, மைசூரு, ஐதரபாத்தில் உள்ள ஜி ஸ்கொயர் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டுவருகிறது. சென்னை அண்ணாநகர் தொகுதி திமுக எம்.எல்.ஏ மோகன் மற்றும் அவரின் மகன் கார்த்திக் வீட்டிலும் ஐடி ரெய்டு நடந்துவருகிறது.
இந்த சூழலில் ஜி ஸ்கொயர் நிறுவனம் திமுக குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமானதோ, அவர்கள் கட்டுப்பாட்டிலோ இல்லை என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ எங்கள் நிறுவனம் மீது அண்ணாமலை முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு பல ஆண்டுகள் முன்பே நிறுவனம் செயல்படுகிறது. ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் மொத்த வருமானம் ரூ.38,827.70 கோடி என்பது பொய்யான தகவல். எங்கள் நிறுவனம் மீது எந்த ஊழல் குற்றச்சாட்டும் இல்லை” என தெரிவித்துள்ளது.