சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து இன்றும் சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க டாலரின் மதிப்பு, சர்வதேச சந்தையில் தங்க பத்திரங்கள் மீது அதிகரிக்கும் முதலீடுகள் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்திற்கு மவுசு எகிறியிருக்கிறது. இதனால் இந்தியாவில் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், நடப்பாண்டு மட்டும் சுமார் 39 முறை தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து எப்படியும் ஒரு சவரன் ரூ, 60 ஆயிரத்தை தொட்டுவிடும் என எதிர்பார்த்த நிலையில், அமெரிக்க தேர்தல் முடிவுகள், சர்வதேச சந்தை நிலவரத்தை மொத்தமாக மாற்றியிருக்கிறது.
இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை கணிசமாக குறைந்து வருகிறது. அந்தவகையில் இன்றும் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 சரிந்து ஒரு சவரன் ரூ.56,000க்கும் கீழ் சென்றது. அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ. 55,480க்கும், ஒரு கிராம் ரூ.6,935க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்து கிராம் 100 ரூபாய்க்கும் கீழ் சரிந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கு விற்கப்படுகிறது. சென்னையில் தங்கம் விலை கடந்த 4 நாட்களில் சவரனுக்கு ரூ.2,720 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் மேலும் குறைய வாய்ப்புள்ளதா என்றும் நடுத்தர மக்களிடையே எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.