”தமிழ் புதல்வன்” திட்டத்திற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்க்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை நடப்பு கல்வியாண்டில் செயல்படுத்த ரூ.360 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தகுதி பெறுவதற்கான விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அவை, “ 1. வருமான உச்ச வரம்பு. இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள். தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும். மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.
தமிழக சட்டப்பேரவை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு “அரசுப் பள்ளி” என்பது அரசுப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகள், நகராட்சிப் பள்ளிகள், ஊராட்சி ஒன்றியப் பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பள்ளிகள், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், வனத் துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமைச் சட்டத்தின் கீழ் கல்வி பெறும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள் / அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.
உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டயப் படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. தொலைதூர அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது. வேறு ஏதேனும் உதவித் தொகை பெற்று வருபவராக இருப்பினும், இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவராவர்.மற்ற மாநில பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் இத்திட்டத்தில் பயனடைய தகுதி அற்றவர்களாவர். ஒரே குடும்பத்திலிருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்றிருப்பினும், அனைவரும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய விண்ணப்பிக்கலாம்.
பள்ளிப் படிப்பிற்கு பின்னர், உயர்கல்வி பயின்று வரும் மாணவர்கள் மட்டுமே இத்திட்டத்தில் பயன்பெற தகுதியுடையவராவர். ஒருங்கிணைக்கப்பட்ட பாடப்பிரிவில் (Integrated courses) பயிலும் மாணவர்களுக்கு மட்டும் முதல் மூன்று ஆண்டுகள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகையினை பெற இயலும். பருவத் தேர்வு / வருடத் தேர்வினை எழுத அனுமதிக்கப்படும் மாணவர்கள் இந்த உதவித் தொகை பெறுவதற்கு தகுதி பெறுவார்கள். 11. பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT, IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர். இவர்கள் மாநில திட்ட மேலாண்மை அலகின் மூலமாக அணுகலாம்.” என இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.