நாட்டின் 76-வது குடியரசு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார்.
நாடு முழுவதும் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறுகிறது. இதையொட்டி, காலை 7.50 மணி அளவில் தமிழக போக்குவரத்து காவல் படையினரின் வாகன அணிவகுப்புடன் முதல்வர் ஸ்டாலினும், அவரை தொடர்ந்து, ராணுவ வாகன அணிவகுப்புடன் ஆளுநர் ரவியும் விழா நடைபெறும் இடத்துக்கு வருகை புரிந்தனர். பிறகு, முப்படை தளபதிகள், காவல் துறை உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆளுநருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து, காலை 8 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைத்தார். அப்போது, தேசிய கீதம் இசைக்கப்பட்டதோடு, ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது.
தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை, கடலோர காவல் படை, தமிழக காவல் துறையின் பல்வேறு பிரிவினர், தேசிய மாணவர் படையினர், தமிழக வனத்துறை, சிறைத்துறை, தீயணைப்பு துறை, பள்ளி, கல்லூரிகளின் பேண்டு வாத்திய குழுவினர், சாரண, சாரணிய பிரிவினர், ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை ஆளுநர் ஏற்றுக்கொள்வார்.
இதன்பிறகு, தமிழக கலை, பண்பாட்டு துறை சார்பில் பல்வேறு மாநில கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள், பள்ளி, கல்லூரி மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதையடுத்து, முப்படைகளின் கவச வாகனங்கள், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் திட்ட விளக்கங்கள் அடங்கிய 25 வாகனங்களின் அணிவகுப்பு நடைபெறும்.
அதன்படி, செய்தித்துறை சார்பாக மங்கள இசை அணிவகுப்பும், செய்தித்துறை, காவல்துறை , இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை , கூட்டுறவுத்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கைத்தறித்துறை, சுற்றுலாத்துறை, சமூக நலத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, பொது தேர்தல் துறை, தகவல் தொழில்நுட்பவியல் துறை, வீட்டு வசதித்துறை, வனத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய 25 துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெறும்.
இதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்ச்சியில், வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் பதக்கம், திருத்திய நெல் சாகுபடிக்கான விருதுகள், மதுவிலக்கு தொடர்பான காந்தியடிகள் பதக்கங்கள், சிறந்த காவல் நிலையத்துக்கான விருது உள்ளிட்ட விருதுகளை முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். பார்வையாளர்கள் விழாவை பார்க்க, தமிழக பொதுத் துறை பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது. சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து, பொதுமக்கள் நின்று பார்க்கவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவானது 9.30 மணியளவில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு 10 ஆயிரம் போலீஸார் கண்காணிப்பு, ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.