தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் ஓய்வுபெறும் நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு வரும் 2025 மே மாதம் 31ஆம் தேதி வரை பணி நீட்டிப்பு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும்பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வுபெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது.
இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல்
வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள்
திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது
முதிர்வின் காரணமாக ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி
வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.
முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உத்தரவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.