வெப்பமண்டலமாக மாறும் அபாய நிலையில் உள்ள கரூர் மாவட்டத்தை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில் கரூர் மாவட்டம் பரமத்தியில் தினசரி 105 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது.
நேற்று வரலாறு காணாத வகையில் 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி கரூர் மாவட்ட மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இதனால் பொதுமக்கள், கூலித்தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களும் அச்சமடைந்துள்ளனர்.
கோடைகாலத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக வெப்பம் அதிகமாக காணப்படும். இருப்பினும், பிற பகுதிகளை விட க.பரமத்தி பகுதியில் மட்டும் வெயில் தாக்கம் அனல் பறந்து வரும். வழக்கத்தை விட இந்தாண்டு கோடை வெயிலின் தொடக்கமே அதிரடியாக இருந்து வருகிறது. தினசரி 104 டிகிரி மற்றும் 105 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் என அனல் பறந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் 1200 அடிக்கு கீழ் சென்று விட்டது. வறட்சியின் கோர தாண்டவத்தால் கிணறுகளில் தண்ணீர் வற்றி விட்டது. ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தடுமாறி வருகின்றனர். காவிரி மற்றும் அமராவதி, குடகனாறு போன்ற ஆறுகளில் தண்ணீர் கை கொடுக்காததால் இன்று கரூர் மாநகராட்சி பகுதியில் 10 நாட்களுக்கு ஒரு நாள் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அளவிற்கு வறட்சியின் தாக்கம் வாட்டி வதைத்து வருகிறது.
க.பரமத்தி, தென்னிலை, பவுத்திரம் உள்ளிட்ட கிராமங்களைச் சுற்றி 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் அரசு அனுமதியோடு செயல்பட்டு வருகிறது என்றால் அதைவிட இரண்டு மடங்கு அரசு அனுமதி இல்லாமல் நடந்து வருகிறது. கல்குவாரி விதிமுறையை மீறி சட்டவிரோதமாக அளவிற்கு அதிகமான ஆழம் தோண்டி அடி பாதாளத்தை தொட்டு விட்டனர்.
ராட்சச இயந்திரம் மற்றும் பறைகளை வெட்டி எடுக்க சக்தி வாய்ந்த வெடி மருந்துகள் மூலம் பாறைகளை தகர்த்து எடுத்து வருவதின் விளைவாக அதிக அளவு வெப்பம் ஏற்பட்டு வறண்டு பாலைவனமாக மாறி விட்டது.
மேலும் குவாரிகள் உள்ள பகுதிகளில் மரங்களும் செடிகளும் குறைந்த அளவிலே உள்ள காரணத்தினாலும் வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனது.
மேலும், சாலை விரிவாக்கத்தின் போதும் நூற்றுக் கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டது. ஒரு மரம் அகற்றப்பட்டால் அதற்கு பதிலாக 4 மரங்கள் வைத்து வளர்க்க வேண்டும் என நீதிமன்ற ஆணை இருந்தும், இதை பின்பற்றாமல் நீதிமன்ற உத்தரவுகளை காற்றில் பறக்க விட்டதின் விளைவாக க.பரமத்தி கொஞ்சம் கொஞ்சமாக வெப்ப மண்டலமாக மாறி வருகிறது.
அதிகாரிகள் கல்குவாரிகளில் முறையாக ஆய்வு செய்து கண்காணிக்க தவறி விட்டனர். இதனால் சட்டவிரோதமாக அளவுக்கு அதிகமாக ஆழம் தோண்டி பாறைகள் வெட்டி எடுக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதே நிலை நீடித்து வந்தால் அடுத்த தலைமுறையினருக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்ற அச்சம் எழுந்துள்ளது. மக்கள் வாழும் பகுதிகளில் அதிக மரங்களை வைத்தால் மட்டுமே வெப்ப நிலையை குறைக்க முடியும் என சமுக ஆர்வலர்கள் கூறுகின்றனர். க. பரமத்தி பகுதியில் அதிக மரங்கள் வைத்து பராமரிக்க ஊராட்சி மற்றும் பேரூராட்சிகள் மூலம் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. ஆடு, மாடு மேய்க்கிற விவசாயிகள் வெயில் தாக்கத்தினால் உயிரிழப்பு கூட ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதியை வெப்பமண்டல பகுதியாக அறிவித்து அரசு விரைந்து சட்டவிரோதமாக நடக்கும் கல் குவாரிகளை மூடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்குவாரிகளை சட்டப்படி முறைப்படுத்த வேண்டும். மேலும், கரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதியிலும் கட்டாயம் மரக்கன்று வைத்து அதை பராமரித்தால் மட்டுமே இப்பகுதியை வெப்பம் மண்டலமாக மாறுவதை தடுக்க முடியும் என்று தெரிவித்தனர்.
கரூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றிய தமிழக அரசே, போர்க்கால அடிப்படையில் பசுமை வனமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.