குட்கா வழக்கு- ஆளுநர் ரவியால் 11வது முறையாக வாய்தா கோரிய சிபிஐ
ஆளுநர் ஆர்.என்.ரவியின் தாமத்தால் குட்கா ஊழல் வழக்கில் 11வது முறையாக சிபிஐ வாய்தா கோரியுள்ள நிலையில் விசாரணை முடங்கியுள்ளது.
குட்கா முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கா் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய 11 வது முறையாக இன்றும் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ வாய்தா கேட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கபடுவதாக கிடைத்த தகவலின் படி கடந்த 2016-ம் ஆண்டு சென்னை செங்குன்றம் பகுதியில் உள்ள கிடங்கில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யபட்ட குட்கா பொருள்கள் வினியோகம் செய்ய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக டைரியையும் பறிமுதல் செய்தனர். டைரியில் லஞ்சம் வழங்கப்பட்டவர்கள் பட்டியலில், அப்போதைய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் தமிழக போலீஸ் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் போலீஸ் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயரதிகாரிகள், போலீஸ் உயரதிகாரிகளின் பெயர் இடம் பெற்றிருந்தது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த டெல்லி சிபிஐ, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட 6 பேர் கடந்த 2016 ஆண்டு கைது செய்து, கடந்த 2021 ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யபட்டது. அதில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 6 பெயர்கள் மட்டுமே இடம் பெற்றது. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் டிஜிபி உள்ளிட்ட மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகள் என வேறு யாருடைய பெயர்களும் அந்த குற்றப்பத்திரிகையில் இடம்பெறவில்லை. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர்கள் பி.வி.ரமணா, சி.விஜய பாஸ்கர், முன்னாள் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், உள்ளிட்ட மாநில அரசு அதிகரிகள் உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய தமிழக அரசு கடந்த ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி அனுமதி வழங்கியது.
ஆனால் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை நீதிமன்றத்தில் தற்போது சிபிஐ வாய்தா மேல் வாய்தா கேட்டு வருகிறது. வழக்கு இன்று மீண்டும் நீதிபதி மலர் வாலண்டினா முன்பு விசாரணைக் வந்த போது, இன்றும் சிபிஐ சார்பில் வாய்தா கேட்கப்பட்டது. இன்னும் இருவருக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை என சிபிஐதரப்பில் தெரிவிக்கப்பட்டது. இன்றோடு சேர்த்து 11 முறை வாய்தா கேட்டுள்ளது சிபிஐ.. இதை யடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி மலர்வாலின்டுனா அடுத்த மாதம் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.
குட்கா வழக்கில் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதியபோது, அதற்கு பதிலாக ஆளுநர் ஆர்.என். ரவி , சி பி ஐ வழக்கை விசாரித்து வருவதாகவும் சட்ட பரிசீலனையில் உள்ளதாக தெரிவித்திருந்தார். தமிழக ஆளுநர் பாரபட்சமாக நடந்து கொள்வது கண்டத்திற்குரியது என்று வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.