கேரளாவில் இருந்து குட்கா பொருட்கள் கடத்தல் – பாஜக கவுன்சிலர் உள்பட மூவர் கைது
கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்த பாஜக கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
தென்காசி மாவட்டம், தமிழக-கேரளா எல்லை பகுதியான புளியரை வழியாக கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்திக் கொண்டுவருவதாக தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறப்பு பிரிவிற்கு வந்த தகவலை தொடர்ந்து, சிறப்பு பிரிவினர் புளியறை சோதனை சாவடியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போதுகேரளாவில் இருந்து வந்த ஒரு வாகனத்தை மறித்து போலீசார் சோதனை செய்தபோது, அதில் கட்டு கட்டாக பான் மசாலா, குட்கா உள்ளிட்ட தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 1250 கிலோ போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து, அதனை பறிமுதல் செய்த சிறப்பு பிரிவினர் அந்த பொருட்களை கேரளாவில் இருந்து தமிழகத்தில் விற்பனை செய்வதற்காக கொண்டு வந்த செண்பகராஜன் என்ற நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் செங்கோட்டை பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகர் என்பதும், அவர் செங்கோட்டை நகராட்சிக்குட்பட்ட 24-வது வார்டு கவுன்சிலராக உள்ளதும் தெரியவந்தது. மேலும் அவருடன் சாத்தான்குளம் தாலுகா கீழே செட்டி குளத்தைச் சேர்ந்த அஜய் சதீஷ்(23) கிருபாகரன் (35) ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 1264 கிலோ போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு 10 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஆகும். கடந்த ஜூலை மாதம் செண்பகராமன் சேலத்தில் இருந்து ராஜபாளையம் பகுதிக்கு இதே போன்று குட்கா பொருட்களை கடத்தி வந்த போது போலீசில் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.