விபத்தில் சிக்கிய காரில் மூட்டை மூட்டைகளாக குட்கா பறிமுதல்
கோவை சுந்தராபுரம் அருகே விபத்தில் சிக்கிய சொகுசு காரில் இருந்து மூட்டை, மூட்டைகளாக குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை பொள்ளாச்சி நெடுஞ்சாலையில், பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று காலை 8 மணியளவில் சுந்தராபுரம் அருகே காந்திநகர் பகுதிக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த மின் கம்பத்தில் மோதி விபத்தில் சிக்கியது.
இதையடுத்து காரில் வந்த இருவர் அங்கிருந்து தப்பி சென்றனர். அப்போது அவ்வழியாக சென்ற மக்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர். விரைந்து வந்த சுந்தராபுரம் போலீசார் காரை திறந்து பார்த்தபோது உள்ளே மூட்டை மூட்டைகளாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து உள்ளே இருந்த குட்கா பொருட்களை வேறு ஒரு வாகனத்தின் ஏற்றி போலீசார் அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இதையடுத்து பொக்லைன் மூலம் விபத்தில் சிக்கிய கார் மீட்கப்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், காரை ஓட்டி வந்த நபர்கள் யார்? எங்கிருந்து குட்கா கடத்திவரப்பட்டது? என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.