11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
அண்மையில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல், வட மாவட்டங்களை புரட்டிப்போட்டுள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வெள்ளத்தில் ஸ்தம்பித்துப் போயுள்ளன. இதனால் கடந்த 4 நாட்களாக இந்த மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளின் தேர்வுகள் ஏற்கனே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதனிடையே தமிழகம் முழுவதும் நாளை அரையாண்டு தேர்வு தொடங்க இருந்த நிலையில், தற்போது மழை வெள்ளம் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் மட்டுமே தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், மற்ற மாவட்டங்களில் வழக்கம்போல் தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு நாளையும், நாளை மறுநாளும் (டிச.07, 08) நடைபெற இருந்த அரையாண்டுத் தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாகவும், அந்த தேர்வுகள் 14 மற்றும் 20ம் தேதிகளில் நடைபெறும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள திருத்திய செய்திக்குறிப்பில், “தொடர் மழையின் காரணமாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும்
பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அட்டவணையில் 11.12.2023 முதல் குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் அதே பாடத்திற்கான தேர்வுகள் நடைபெறும் எனவும், 07.12.23 மற்றும்
08.12.23 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் மட்டும் 14.12.23 மற்றும் 20.12.23 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறும் எனவும் அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் பள்ளி அளவில் வினாத்தாட்கள் தயாரிக்கும் சிரமங்கள்
தவிர்க்கப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.