Homeசெய்திகள்தமிழ்நாடுபாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா

பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா

-

பாரம்பரிய விளையாட்டுகளுடன் களைகட்டிய வீதி திருவிழா

சென்னை பாண்டி பஜாரில் நான்கு வாரங்களாக உற்சாகமாக நடைபெற்று வந்த மகிழ்ச்சி வீதி திருவிழா இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டுமென சென்னைவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எப்போதும் வாகன நெரிசலாக காட்சியளிக்கும் பாண்டி பஜார் சாலை, மகிழ்ச்சி வீதி திருவிழாவில் விளையாட்டு வீதியாக மாறியது. தொடர்ந்து 4வது வாரமாக நடைபெற்ற திருவிழா ஆடல், பாடல், விளையாட்டு போன்ற பொழுதுப்போக்கு நிகழ்ச்சியுடன் களைகட்டியது.

கடந்த மூன்று வாரங்களாக நடைபெற்ற நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றதை போலவே இன்றும் மக்கள் குடும்பத்துடன் குவிந்தனர். பார்க்கும் இடமெல்லாம் மகிழ்ச்சி ததும்பிய பாண்டி பஜாரில் டிரம்ஸ் மேளம் முழங்க இளைஞர்கள், பெண்கள் குத்தாட்டம் போட்டனர்.

வீதிகளில் திரண்ட இசை கலைஞர்கள் பாடல்களை பாட, அங்கு கூடியிருந்த சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மெய்மறந்து ரசித்ததோடு மட்டுமின்றி பாடல் வரிகளை முனுமுனுத்தது பார்ப்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

90’ஸ் கிட்ஸ்களின் விளையாட்டுகளான கயிறு இழுத்தல்,பரமபதம், பல்லாங்குழி, பலூன் உடைத்தல் போட்டிகளில் சிறுவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று பட்டையை கிளப்பினர்.

தினமும் இயந்திரத் தனமாக நகரும் நகர வாழ்க்கையில் சற்று இளைப்பாறுதல் தருவதாக அமைந்த இந்த மகிழ்ச்சி வீதி திருவிழாவை மேலும் சில வாரங்களுக்கு நடத்த வேண்டும் என்பதே சென்னைவாசிகளின் விருப்பம்.

MUST READ