ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் ஹரிதரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த 5-ந் தேதி தனது வீட்டின் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற போது 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியதில் படுகாயமடைந்தார். இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை உடனடியாக மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சற்று நேரத்திலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் இதுவரை 15 பேரை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக தப்பியோடிய கைதி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூரைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் ஹரிதரனை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அதிமுகவிலிருந்து மலர்கொடி கைது செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது நபராக ஹரிதரனும் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இதில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட திமுக வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர்தான் ஹரிதரன் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஹரிதரன் அளித்த தகவலின் பேரில் கூவம் ஆற்றில் வீசப்பட்ட கொலையாளிகளின் செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
எஸ்பி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சி அதிமுக கவுன்சிலர் ஹரிதரன், கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி நேற்றிரவு அறிவித்தார். இதில் அவர் கூறப்பட்டிருப்பதாவது கட்சிக்கு களங்கம். அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார் எனக் குறிப்பிட்டுள்ளார்.