சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் காரும், டெம்போ டிராவலர் வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தஞ்சை காந்திநகரை சேர்ந்த பவுல் டேனியல், அவரது சகோதரர் மைக்கேல், அவர்களது 2 மகள்கள் என 4 பேரும் காரில் ராமநாதபுரம் மாவட்டம் ஆண்டாபூரணி பகுதியில் நடைபெற்ற உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தனர். சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அடுத்த மார்ச்சம்பட்டி மேம்பாலத்தில் சென்றபோது, எதிரே ராமேஸ்வரத்தில் இருந்து திருச்சி நோக்கி சென்ற டெம்போ டிராவலர் வேனுடன் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானது. இதில் 2 சிறுமிகள் உள்பட 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் டெம்போவில் பயணம் செய்த மலேசிய சுற்றுலா பயணிகள் 4 பேர் படுகாயம் அடைந்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலிசார், காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்து குறித்து தேவக்கோட்டை போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.