அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த வழக்கில் நாளை விசாரணை
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தாக்கல் செய்த மனு நாளை அவசர வழக்காக சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தது, பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தது பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ.க்கள் மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் மற்றும் ஜே.சி.டி .பிரபாகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த பதில்மனுவில், வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது கட்சியின் உறுப்பினரே அல்ல என்று தெரிவித்திருந்தார்.
கடந்த 2022 ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14ம் தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது எனவே மனோஜ்பாண்டியன் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு வழக்கை விரிவான விசாரணைக்காக ஏப்ரல் 11ஆம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். மேலும் வைத்தியலிங்கம் மற்றும் ஜேசிடி பிரபாகர் தொடர்ந்து வழக்குகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தான் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இன்றும் நாளையும் விருப்ப மனு பெறப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி விருப்ப மனு தாக்கல் செய்தார்.
அவரை எதிர்த்து யாரும் விருப்ப மனுத்தாக்கல் செய்யாத நிலையில், நாளையே அவர் போட்டியின்றி தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து, ஓபிஎஸ் தரப்பில் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அவசர வழக்கு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவிடம் முறையிட்டனர். முறையீட்டை ஏற்றுக் கொண்டு, நீதிபதி குமரேஷ் பாபு விசாரிப்பார் என்று அனுமதி அளித்தார். இந்த அனுமதி பேரில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நாளை காலை 10 மணிக்கு சென்று உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க உள்ளார்.