Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

-

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நேற்று மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்றதாகவும், மேலும் இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் டானா புயலாக வலுபெற்று, காலை 8.30 மணி அளவில் அதே பகுதிகளில் பாரதீப்பிற்கு தென்கிழக்கே 520 கிலோமீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு தெற்கு- தென்கிழக்கே 600 கிலோமீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு  தெற்கு- தென்கிழக்கே 610 கிலோமீட்டர் தொலைவிலும் நிலைகொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை அதிகாலை வாக்கில்  வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுபெறக்கூடும். இது, வடக்கு ஒரிசா – மேற்கு வங்காள  கடற்கரை பகுதிகளில், பூரி  – சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு – 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110  கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Rain
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறதாகவும், இதன் காரணமாக தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி,
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருப்பத்தூர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய  மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை  நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி,  திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ