தமிழகத்தில் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவுகின்றன. நேற்று மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியானது, இன்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதியில் நிலைகொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 13-ஆம் தேதி காலை வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வரும் 17ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும் இன்று
கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களிலும், காரைக்காலிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
நாளை மறுநாள் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வரும் 15ம் தேதி செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல் வரும் 16ஆம் தேதி வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.