தமிழகத்தில் இன்று திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்றும், 25 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதேபோல், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சேலம், நாமக்கல், தர்மபுரி, அரியலூர், பெரம்பலூர், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.
நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 19 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. இதேபோல், நாளை மறுநாள் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.