கனமழை காரணமாக செங்கல்பட்டு, நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தாலுகாக்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று 5 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, திருப்போரூர், மதுராந்தகம், செய்யூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஆகிய தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் 3 தாலுகாக்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை, கூடலூர் மற்றும் கோத்தகிரி தாலுகாவில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், கொல்லிமலை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா உத்தரவிட்டுள்ளார்.