கனமழையால் பாதிக்கப்பட்டு உள்ள கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்கள் முத்துசாமி, ராஜேந்திரன் ஆகியோர் பொறுப்பு அமைச்சர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் தொடர் கனமழை பெய்ததையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நேரில் ஆய்வு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் புறப்பட்டு சென்றார். அப்போது, கனமழையால் பாதிக்கப்பட்ட கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்ட ஆட்சியர்களுடன் தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு ஃபெஞ்சல் புயலால் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவது தொடர்பாக கேட்டறிந்தார்.
மேலும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரூஷ்ணகிரி மாவட்டத்திற்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, தருமபுரி மாவட்டத்திற்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோரை உடனடியாக மாவட்டங்களுக்கு நேரில் சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.