நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை காரணமாக மலைப்பாதையில் பாறைகள் உருண்டு விழுந்ததால் உதகை – மேட்டுப்பாளையம் இடையே இன்று மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற மலைரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் உள்ளுர் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டு உதகையின் அழகை கண்டு ரசிப்பர். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குன்னூரில் அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 13 செ.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக உதகை – மேட்டுப்பாளையம் மலைரயில் பாதையில் பர்லியார் – ஹில்குரோவ் இடையே பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் இன்று மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலைரயில் சேவை மற்றும் உதகை – மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.