தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலின்போது தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற அனுமதியின்றி கேசவ விநாயகத்தை விசாரணைக்கு அழைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யக்கோரி, சிபிசிஐடி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில்சிபல், இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினார். வழக்கில் சம்பந்தப்பட்ட ஹார்ட் டிஸ்க் காணாமல் போயுள்ளதாக தெரிவித்த கபில் சிபல், விசாரணைக்கு ஒவ்வொரு முறையும் அனுமதி கோரி நீதிமன்றத்தை அணுக முடியாது என்று தெரிவித்தார்.
இதனை ஏற்று நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ததுடன், ஒருவாரம் முன்னதாக விசாரணைக்கு ஆஜராக கூறி விசாரணை அதிகாரி வாட்ஸ்அப் மூலமாகவோ அல்லது நேரடியாகவோ கேசவ விநாயகத்துக்கு சம்மன் வழங்கலாம் என்றும் உத்தரவிட்டனர்.