ஓபிஎஸ் எப்படி நிவாரணம் கோர முடியும்? : ஈபிஎஸ் தரப்பு
அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பின் மேல்முறையீடு வழக்குகள், ஒரு மாத இடைவெளிக்கு பின் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை வந்தது.
அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் வழக்கில் தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சி.எஸ் வைத்தியநாதன் வாதங்களை முன்வைத்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பு, கட்சி விவகாரங்களில் பொதுக்குழு முடிவே இறுதியானது. கட்சியின் அனைத்து முடிவுகளையும் தொண்டர்களின் எண்ணங்களை அறிந்து பொதுக்குழு உறுப்பினர்கள், அதை பொதுக்குழுவில் முன்வைப்பார்கள். அங்கு வாக்கெடுப்பு நடத்தி முடிவெடுக்கப்படும் என்றனர்.
தொடர்ந்து பேசிய ஈபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், “கட்சியின் விதிகளுக்கு மேலானவர்கள் யாருமில்லை. கட்சி விதியை மீறினால் கட்சியின் தலைமை மீதே நடவடிக்கை எடுக்க முடியும். ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. ஓபிஎஸ் தனியாக நிர்வாகிகளை நியமித்து வரும் போது, அவர் எப்படி கட்சியில் இருந்து நீக்கியதை எதிர்த்து நிவாரணம் கோர முடியும்? கட்சியில் இருந்து நீக்கப்பட்டதால் எப்படி எம்.எல்.ஏவாக செயல்படுவதில் அது பாதிப்பை ஏற்படுத்தும்?. ஓ.பி.எஸ் தரப்பால் கட்சியின் செயல்பாடு முடங்கிவிட்டது. இதை உச்சநீதிமன்றமே ஏற்றுக்கொண்டது. பொதுக்குழு உறுப்பினர்கள், தொண்டர்களால் செய்யப்படுகின்றனர். கட்சி தொண்டர்களின் பிரதிநிதிகளாகவே அவர்கள் செயல்படுகின்றனர்” என்றார்.