Homeசெய்திகள்தமிழ்நாடுஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி! 

ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி! 

-

ஆவடியில் ராணுவ பீரங்கிகள் கண்காட்சி!
File Photo
திருவள்ளூர் மாவட்டம், ஆவடியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்துக்கு சொந்தமான ராணுவத்திற்கு தேவையான கனரக வாகனங்களைத் தயாரிக்கும் தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த ஆலையில், துப்பாக்கிகள் மற்றும் பீரங்கிகள் போன்றவற்றுக்கு தேவையான உதிரி பாகங்கள் தயாரிப்பது மற்றும் அசெம்பிள் செய்வது உள்ளிட்டவை நடைபெற்று வருகிறது. இந்த தொழிற்சாலையில் 500- க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், ‘ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்தின்’ கீழ் இந்த ஆலையின் தங்கய்யா கேட் அருகில் ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் அடங்கிய ராணுவ கண்காட்சி இன்று (ஆகஸ்ட் 11) காலை 10.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை தொழிற்சாலையின் தலைமை பொது மேலாளர் ராம்பத் தொடங்கி வைத்தார். இந்தியாவில் தயாரான ராணுவ தளவாடங்கள், ராணுவ பீரங்கிகள், உதிரி பாகங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.
இந்த கண்காட்சியை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நேரில் பார்த்து வருகின்றனர். அப்போது, அர்ஜுன், பீஷ்மா, அஜயா பீரங்கிகளை ராணுவ வீரர்கள் இயக்கிக் காண்பித்தனர். நாளை (ஆகஸ்ட் 12) வரை நடைபெறும் இந்த கண்காட்சியை, காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளின் மாணவர்கள் பார்வையிடலாம் என்றும், அனுமதி இலவசம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத் துறைக்கு தேவையான பொருட்கள் 98% உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், உள்நாட்டு உற்பத்தியை 100% அதிகரிக்கும் வகையில் இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ