மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறேன்- வைகோ
1929ல் பெரியார் ஈ.வெ ராமசாமி நாயக்கர் நடத்திய சுயமரியாதை இயக்கத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என இயற்றப்பட்ட தீர்மானத்தை 60 ஆண்டுகளுக்கு பிறகு நிறைவேற்றியவர் கருணாநிதி என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவின் மீது மாநிலங்களவையில் பேசிய வைகோ, “மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பு இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை இல்லை. அதனால் அவர்கள் அந்த நாட்டு அரசை எதிர்த்து போராடி, வாக்குரிமையை பெற்றார்கள். தமிழகத்தில் 1921ம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்ததும், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை அளித்தது. 1929ல் பெரியார் இ.வெ ராமசாமி நாயக்கர் சுயமரியாதை இயக்கத்தை செங்கல்பட்டில் நடத்தினார். அதில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றினார்.
60 ஆண்டுகளுக்கு பிறகு கருணாநிதி தமிழக முதல்வரான பிறகு, பெண்களுக்கு சொத்துரிமை வழங்கி உத்தரவுகளை பிறப்பித்தார். தமிழகம் கண்ணகி என்கிற ஒரு தைரியமிக்க பெண்மணியை பார்த்திருக்கிறது. பாண்டிய மன்னர் நீதித் தவறி தன் கணவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதால், மதுரையை எரித்தாள் கண்ணகி. கண்ணகி உலக நீதிக்கான சின்னமாக போற்றப்படுகிறார். வேலுநாச்சியார் என்கிற வீரப்பெண்மணி ஆங்கிலேய ராணுவத்திற்கு எதிராக திப்பு சுல்தான் உள்ளிட்டோரின் உதவியோடு போரிட்டு வென்றுக் காட்டினார். அப்பேற்ப்பட்ட வீரப் பெண்மணிகளை கொண்ட தமிழகத்தின் சார்பில், இந்த மசோதாவை வரவேற்கிறேன். இந்த மசோதாவை உடனடியாக நிறைவேற்றி அரசு இதை அமல்படுத்த வேண்டும். ஓ.பி.சி பிரிவினருக்கு உள் ஒதுக்கீடு தர வேண்டும் என்றும் நான் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார்.