பழனியில் பக்தர் – காவலாளி இடையே அடிதடி, தள்ளுமுள்ளு
பழனி முருகன் கோவிலுக்கு வந்த வெளியூர் பக்தரும் கோயில் பாதுகாவலரும் ஒருவருக்கொருவர் தாக்கி கொண்ட சம்பவத்தில் நான்கு பாதுகாவலர்களை பணியிடை நீக்கம் செய்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர் கிருத்திகை ,பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற விசேஷ நாட்களில் ஏராளமானூர் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய் கிழமை கிருத்திகை தினத்தில் பக்தர்கள் பலரும் சாமி தரிசனம் செய்ய வருகை தந்தனர். மலை மீது இரவு 9:30 மணிக்கு ராக்கால பூஜை முடிந்து கோயில் நடை அடைக்கப்படும். இரவு ஒன்பது மணி வரை பக்தர்கள் மலை மீது ஏறுவதற்கு கோயில் பாதுகாவலர்கள் அனுமதிக்கின்றனர்.
இந்த நிலையில் திருப்பூரைச் சேர்ந்த பக்தர் ஒருவர் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்து 9 மணிக்கு மேலாக மலையடிவாரத்தில் உள்ள படிப்பாதையில் கதவுகள் அடைக்கப்பட்ட பின்னர் மலை மீது செல்ல முயற்சி செய்துள்ளார். பணியில் இருந்த கோயில் பாதுகாவலர்களிடம் மலை மீது செல்ல அனுமதிக்க கோரி வாக்குவாதம் செய்து பின்னர் அடிதடி ஏற்பட்டுள்ளது. பக்தரும் கோயில் பாதுகாவலர்களும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டுள்ளனர். பழனி மலை அடிவாரத்தில் பக்தரும் கோயில் பாதுகாவலர்களும் அடித்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பக்தரை தாக்கியதாக கோயில் பாதுகாவலர்கள் ராஜேஷ், செல்வ கணபதி ,தங்கவேல், கருப்பையா ஆகிய நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.