தமிழகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரிச் சோதனை
தமிழகம் முழுவதும் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றுவருகிறது.
பொன்னேரி அருகே வடசென்னை அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளும் சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வெள்ளிவாயல்சாவடியில் சென்னை ராதா இன்ஜினியரிங் ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து நிலக்கரியினை வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு கன்வேயர் பெல்ட்டில் கொண்டு செல்லுதல், வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி எந்திரங்களில் நிலக்கரி கையாளுதல், சாம்பல் கழிவுகளை கையாளுதல் என பல்வேறு ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிறுவனம் பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரையடுத்து இன்று காலை முதல் 5க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சுமார் 20ஆண்டுகளுக்கு மேலாக இந்த நிறுவனம் வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் சோதனையின் முடிவிலேயே வரிஏய்ப்பு தொடர்பான விவரங்கள் குறித்துத் தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.