கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 21 ஆயிரத்து 523 கனஅடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அம்மாநில அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நேற்று வினாடிக்கு 14,620 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 18,690 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் கே.ஆர்.எஸ் அணையில் இருந்து உபரிநீர் திறப்பு வினாடிக்கு 16,523 கன அடியாக அதிகரித்துள்ளது.

இதேபோல், 84 அடி உயரம் கொண்ட கபிணி அணையின் நீர் மட்டம் 83.46 அடியாக உள்ளது. கபிணி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6,628 கனஅடியில் இருந்து 8,802 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தற்போது 5 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
கர்நாடகாவின் இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் திறப்பு 10,576 கன அடியாக இருந்த நிலையில், இன்று 21 ஆயிரத்து 523 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 5000 கனஅடியிலிருந்து 12 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக அணைகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.