திண்டுக்கல் மார்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரிப்பு, அதிரடியாக விலை பாதிக்கு பாதி குறைவு, விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் ரயில் நிலையம் அருகே உள்ள சிறுமலை செட்டில் திங்கள் மற்றும் வியாழக்கிழமை வாழைப்பழம் ஏலம் நடைபெறும். இந்த மார்கெட்டிற்கு ஏ வெள்ளோடு, தருமத்துப்பட்டி, செட்டியபட்டி, கன்னிவாடி, குட்டத்து ஆவாரம்பட்டி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், மாரம்பாடி உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் விளைவிக்கக் கூடிய வாழைத்தாரை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம்.
இங்கிருந்து திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் மற்றும் அருகில் உள்ள பல மாவட்டங்களுக்கும் வியாபாரிகள் வாங்கி செல்வது வழக்கம் பெரும்பாலும் செவ்வாழை, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, பூவம்பழம், நாட்டுப்பழம் போன்ற பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
மார்கெட்டில் வாழைத்தார் ஏலம் மூலம் விடப்படுவது வழக்கம், மார்கெட்டிற்கு சராசரியாக திங்கள் மட்டும் வியாழக்கிழமைகளில் 2,000 முதல் 3,000 வாழைத்தார்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஆனால் தற்பொழுது அதிக அளவில் வாழை நடவு செய்ததால் வாழைத்தார் விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக மார்க்கெட்டிற்கு வாழைத்தார் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விலை பாதிக்கும் பாதியாக குறைந்துள்ளது கடந்த ஐப்பசி மாதம் அதிக அளவில் முகூர்த்த நாட்கள் இருந்ததால் வாழைத்தார் விலை கிடுகிடு என உயர்ந்து விற்பனையானது. இதனால் வாழை பயிர் செய்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால் தற்பொழுது வாழைத்தார் வரத்து அதிக அளவில் உள்ளதாலும் தொடர் மழையின் காரணமாகவும் விற்பனை மந்தமாக உள்ளது. இதனால் பாதிக்கு பாதி விலை குறைந்துள்ளது. இன்று மட்டும் 4,000க்கும் மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் செவ்வாழை வாழைத்தார் ரூ 1,000 முதல் 1200 வரை விற்பனையானது ஆனால் தற்பொழுது 600 முதல் 700 வரை விற்பனையாகிறது.அதே போல் கற்பூரவள்ளி வாழைத்தார் 700 ரூபாய்க்கு விற்பனையானது. ஆனால் தற்பொழுது 300 முதல் 400 வரை விற்பனையாகிறது. ரஸ்தாளி வாழைத்தார் 700 ரூபாய்க்கு விற்பனையானது ஆனால் தற்பொழுது ரஸ்தாளி 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. நாட்டுப்பழம் தார் 150 க்கு விற்பனை ஆனது ஆனால் தற்பொழுது 70 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதேபோல் அனைத்து வாழைப்பழங்களின் விலையும் குறைந்துள்ளதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தை மாதம் வரை இதே நிலைமைதான் நீடிக்கும் என்றும் தைமாத முகூர்த்த நாட்களுக்குப் பின்பு தான் விலை ஏற்றம் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.