16 இந்திய மீனவர்களை விடுவிக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின் கடிதம்
பிப்ரவரி மாதம் 23ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சிறைப்பிடிக்கப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பி உள்ளார்.
தமிழ்நாட்டின் தேங்காப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து பிப்ரவரி 9ம் தேதி 16 இந்திய மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் பிப்ரவரி 23ம் தேதி ஆழ்கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் டியாகோ கார்சியா அதிகாரிகளால் விசைப்படகுடன் கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி தொழிலை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக மீனவர்கள் நம்பியுள்ள நிலையில், கைது சம்பவம் அவர்களின் குடும்பங்களுக்கு மிகுந்த இன்னல்களை ஏற்படுத்துமென்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
எனவே, இந்திய வெளியுறவு அமைச்சகம், தூதரக வழிமுறைகள் மூலமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இச்சம்பவத்தினை எடுத்துச் சென்று, கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகினையும் விடுவித்திட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளார்.