
தமிழகம் முழுவதிலும் உள்ள அரசு கூர்நோக்கு இல்லங்களின் செயல்பாடுகளை மேம்படுத்த வேண்டியது தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!
பல்வேறு கூர்நோக்கு இல்லங்களில் ஆய்வுச் செய்த குழுவினர், 500 பக்க அறிக்கையை முதலமைச்சரிடம் அளித்துள்ளனர். அந்த அறிக்கையில், கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க வேண்டும். சிறுவர்கள் தூங்குவதற்கு மெத்தை, தலையணையுடன் கூடிய கட்டில் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்டப் பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன.
கூர்நோக்கு இல்லத்தில் உள்ள சிறுவர்களை 24 மணி நேரமும் அறைகளில் அடைத்து வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி அரங்கு அல்லது மூடிய அரங்குகளில் விளையாட அனுமதிக்க வேண்டும்.
கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் பயன்படுத்த நவீன கழிவறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், அனைத்து கூர்நோக்கு இல்லங்களிலும் மனநல ஆலோசகரை முழு நேர பணியில் அமர்த்தப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கூர்நோக்கு இல்லங்களை ஐ.ஏ.எஸ். அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.
மேலும் கூடுதல் பணியாளர்கள், துணை இயக்குநர் ஆய்வு உள்ளிட்டவை அவசியம் எனவும், உயர்மட்டக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!
செங்கல்பட்டு அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் தங்கியிருந்த சிறுவன், உயிரிழந்ததைத் தொடர்ந்து ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. இளைஞர் நீதி அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக திறனை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட இந்தக் குழுவில் ஓய்வுப் பெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் சார்பாக, ஒரு பிரதிநிதியும் இடம் பெற்றிருந்தனர்.