முதல்வர் தலைமையில் போதை பொருள் அழிக்கும் பணி தீவிரம் – காவல்துறை தகவல்
தமிழக முழுவதும் உள்ள பறிமுதல் செய்யப்பட்ட போதை பொருளை நாளை முதல்வர் தலைமையில் நடக்கும் நிகழ்வில் அழிக்கும் பணி துவக்க உள்ளதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கஞ்சா கடத்துபவர்கள் மற்றும் விற்பவர்கள் தொடர்பான 5000 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மற்றும் கஞ்சா கடத்துபவர்களின் 132 கோடி மதிப்புள்ள சொத்துக்களை காவல்துறை முடக்கியுள்ளது. தேவை குறைப்பு என்ற அடிப்படையில் கஞ்சா கிடைக்க முடியாத சூழலை ஏற்படுத்தும் வகையில் தமிழக காவல்துறை திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று நடைபெற்ற மாநில அளவிலான போதைப்பொருள் ஒழிப்பு மாநாட்டில், தமிழ்நாடு முதலமைச்சர் ‘போதைப் பொருட்களற்ற தமிழ்நாட்டை உருவாக்க வேண்டுமென்று தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறை மற்றும் அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு துறை, போதைப் பொருட்கள் மற்றும் போதை பொருட்களின் சட்டவிரோத விற்பனை மற்றும் கடத்தலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
போதைப்பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் கடுமையான சட்டத்தை அமலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 2022-ம் ஆண்டில், மொத்தம் 10,665 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 14,934 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 28,384 கிலோ கஞ்சா, 0.556 கி.கி, ஹெராயின், 63,848 மாத்திரைகள் மற்றும் 98 கிலோ கிராம் மற்ற போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூன் மாதம் வரை மொத்தம் 5,358 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,513 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் விளைவாக 13,953 கிலோ கஞ்சா, 0.678 கி.கி. ஹெராயின், 10,564 மாத்திரைகள் மற்றும் 125 கிலோ மற்ற போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு லாபம் பெற்ற குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணை நடத்தப்பட்டு, அவர்களின் அசையும் / அசையா சொத்துக்கள் சட்ட விதிகளின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றது.
கடந்த 2022ம் ஆண்டில், 67 NDPS வழக்குகளில் தொடர்புடைய 18 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணை மேற்கொள்ளப்பட்டு அவர்களின் 33 எண்ணிக்கையிலான சுமார் ரூ 17 கோடி மதிப்புடைய அசையும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் ஜூன், 2023 வரை, 36 குற்றவாளிகளுக்கு எதிராக நிதி விசாரணை நடத்தப்பட்டு, சுமார் 115 கோடி மதிப்பிலான 12 அசையும்/அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், NDPS வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளின் 3700 வங்கிக் கணக்குகள் கடந்த 2022-ம் ஆண்டு முடக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் மே 2023 வரை 1,256 கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
கடுமையான சட்ட நடிவடிக்கை மட்டுமல்லாமல், ‘தேவை குறைப்பு’ என்ற இலக்கை அடைவதற்காக, போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக இளைஞர்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தமிழ்நாடு அமலாக்கப் பணியகம், குற்றப் புலனாய்வு பிரிவு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் முதன்மைத் திட்டமான “Drive Against Drugs (டிஏடி) கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
விழிப்புணர்வு நடவடிக்கையின் தொடர்ச்சியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில்முறை கல்லூரிகளில் மாணவ மாணவியருக்கு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கென, நாளை காலை 10.15 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் மாநில அளவிலான நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமை விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களிடம் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழியை வழிநடத்தவும், போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு முயற்சிகளை முன்னெடுப்பதற்கு அன்புடன் சம்மதம் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு திரைப்படம் மற்றும் இசை ஆல்பம் வெளியிடப்படுகிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாநிலம் முழுவதும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதிலும் அழிக்கும் பணியையும் துவக்கி வைக்க உள்ளார்.