சீமான் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் காவல் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் குறித்து அவதூறாக கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆவடி அடுத்த பட்டாபிராமை சேர்ந்த அஜேஷ் என்பவர் சீமான் மீது காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி., ஆணையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து, செப்டம்பர் 2ம் தேதி ஆணையத்திடம் சமர்ப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு சீமான் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் சீமான் மீது பதியப்பட்ட வழக்கில் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.